திங்கள், 18 நவம்பர், 2013

விலங்கொடிக்கப் போ...!!!

கனவுகளா..?

கண்களைக் கசக்கி கலைத்துவிடு...!

எதிர்பார்ப்புகளா...?

எதற்கு அவை..? எரித்துவிடு...!

விருப்பங்களா...?

வந்த விலைக்கு விற்று விடு...!

உணர்வுகளா...?

உணவுக்குதவுமா...? உதறி விடு...!

உன்னிடம் இன்னும்

என்ன இருக்கிறது...?

தன்மானமா...?

இன்னுமா...?

அடே...! அதைக் கொண்டு

அரிசி வாங்க முடியுமா...?

அப்புறமென்ன...?

குப்புறக் கவிழ்த்து

கொளுத்தி விடு...!

சரி...! வா...!

உயிரும் உடலும் மட்டும்

இருக்கிறதா...?


போதும்...!

அடிமைக்கு இதுவே அதிகம்தான்...!

வா...! முதலில் குனி...!

நிமிர்ந்து பார்க்காதே...!

கைகளைக் கட்டு...!

பயமோ இல்லையோ

நடுங்கட்டும் கால்கள்...!

தோழா...!

உயரங்களை

உயர்த்திய உன் தோள்கள்,

மலைகளை

உடைத்தெறிந்த உன் கைகள்,

தேசங்களைக்

கடந்த உன் கால்கள்

அடிபட்டு மிதிபட்டு

அடிமைப்பட்டு வாழத்தானோ...?

வலி தாங்கும் உன் உடலுக்கு

வலிமை இல்லையோ...?

புண்பட்டு புண்பட்டு

புழுங்கும் உன் மனம்

பண்படவில்லையோ...?

போ...!

குனிந்த உன் முதுகெலும்பை

முறுக்கிவிட்டு போ...!

கட்டிக்கொண்டிருக்கும் உன் கைகளை

உயர்த்திக்கொண்டு போ...!

நடுங்கிய கால்களால்

வீறுநடை போட்டு போ...!

அடிமைக்கு உயிர் என்ன சொத்தா...?

எல்லோரும் விடப்போகும் உயிர்தான்...!

நீ போ...!

விலங்கொடித்து

விலங்கொடிக்கப் போ...!

காலம் எடுக்கும் உயிரை

நீ கைகளில் எடுத்து போ...!

உயிரைவிட வலுவாயுதம்

உலகினில் இல்லை...!

போ...! விரைந்து போ...!

மீண்டு வந்தால் வாழ்க்கை உண்டு...!

மாண்டு போனால் வரலாறு உண்டு...!


---

உதயகுமார் தமிழன்



செவ்வாய், 23 ஏப்ரல், 2013

மாவீரர் நாள் கவிதைகள்!!! (புதுவை இரத்தினதுரை)



பூக்கும் நம்பிக்கைப் பூ..!!!

மாரிமழை பொழியும். மண்கசியும்
ஊர்முழுதும்
வாரியடித்து வெள்ளம் வான்பாயும்
கார்த்திகையில்
பூமி சிலிர்த்துப்போய் பேறடையும்.
துயிலுமில்லச் சாமிகளுக்கான
சந்தனநாள் வந்தடையும்.
மாவீரச்செல்வங்கள்
மண்கிழித்து வெளிவந்து
சாவீரச்செய்தி சாற்றி
உறவுரைத்து பேசும் நாள்.
விழியில் பொலபொலன்று
நீர்த்தாரை வீசும் நாள்.
தமிழீழம் விடியும் என நம்பி
பாடும் நாள்.
விதைத்த பயிர்கள்
நிமிர்ந்தழகாய் கூடும் நாள்.
தமிழர் குலம் குதிக்கும் நாளிதுதான்.
குன்றிக் குரல் நடுங்கி குற்றேவல் செய்த இனம்
இன்றிந்த நிமிர்வுக்கு இட்ட முதல் விதைப்பு.
சாவைக்கொடுத்தேனும் தமிழ்வாழ்வு
என நிமிர்ந்து பேசும்படியான
புதுவாழ்வின் புலர்வுதினம்.
புனிதர்களின் துயிலுமில்லம்
விழிசொரியும் உறவுகளால் விளங்கும்.
உள்ளுறங்கும் பிள்ளைகளின்
வாய்கள் பேசுவது காதுவிழும்.
பள்ளிகொள்வோர் எம்மைப்
பார்ப்பதையும் விழியுணரும்.
நாமழுதால் சிரிக்குமொலி
நாற்திசையும் எதிரொலிக்கும்.
தாயழுதால் அம்மா தளராதே எனுமொற்றைச்
சொல்லே துயிலுமில்லச் சூழலிலே கேட்டிருக்கும்.
பூச்சொரிந்து,
நெய்விளக்கில் பொறியேற்றி,
விழிசொரிந்து,
கார்த்திகையில் அந்நாள் கலங்கி,
வெளியில்வர
பூத்திருக்கும் நம்பிக்கைப் பூ...!!!

உலகம்-கவிஞர்.வைரமுத்து



உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும்
தன்னம்பிக்கை தளர விடாதே
இரட்டைப் பேச்சுப் பேசும் உலகம்
மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே

ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு
உலகின் வாயில் இரட்டை நாக்கு
எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லாம்
உனக்குச் சொல்கிறேன் உள்ளத்தில் எழுது

இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்
இலக்கியம் இல்லை லேகியம் என்றது
திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தேன்
பரிமே லழகரை வரச்சொல் என்றது

குறுந்தொகை கம்பன் கொட்டி முழக்கினேன்
குண்டுச் சட்டியில் குதிரை என்றது
எலியட் நெருடா எல்லாம் சொன்னேன்
திறமை எல்லாம் திருடிய தென்றது

எளிய தோற்றமே இயல்பென இருந்தேன்
வடுக பட்டி வழியுது என்றது
அழகாய் நானும் ஆடைகள் கொண்டேன்
கழுதைக் கெதற்குக் கண்மை என்றது

மேடையில் கால்மேல் காலிட் டமர்ந்தேன்
படித்த திமிர்தான் பணிவில்லை என்றது
மூத்தவர் வந்ததும் முதலில் எழுந்தேன்
கவிஞன் நல்ல “காக்கா” என்றது

உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன்
காதில் பூ வைக்கிறான் கவனம் என்றது
விரல்நகத் தளவு விமர்சனம் செய்தேன்
அரிவாள் எடுக்கிறான் ஆபத்து என்றது

மற்றவர் சூழ்ச்சியால் மண்ணில் விழுந்தேன்
புத்தி கொழுத்தவன் புதைந்தான் என்றது
மூச்சுப் பிடித்து  முட்டி முளைத்தேன்
தந்திரக் காரன் தள்ளிநில் என்றது

பகையைக் கண்டு பைய நகர்ந்தேன்
பயந்துவிட்டான் பாவம் என்றது
மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்
விளங்கி விட்டதா மிருகம் என்றது

பணத்தில் பொருளில் பற்றற் றிருந்தேன்
வறுமையின் விந்தில் பிறந்தவன் என்றது
என்னைத் தேய்த்து மண்டபம் கட்டினேன்
புலவன் இல்லை பூர்ஷ்வா என்றது

சொந்த ஊரில் துளிநிலம் இல்லை
இவனா மண்ணின் மைந்தன் என்றது
தென்னை மரங்கள் தேடி வாங்கினேன்
பண்ணையார் ஆனான் பாவலன் என்றது

கயவர் கேட்டால் காசு மறுத்தேன்
கறக்க முடியாக் கஞ்சன் என்றது
உண்மை இருந்தால் உறுபொருள் கொடுத்தேன்
உதறித் திரியும் ஊதாரி என்றது

மங்கைய ரிடையே மௌனம் காத்தேன்
கவிஞன் என்ற கர்வம் என்றது
பெண்கள் சிலருடன் பேசத் தொடங்கினேன்
கண்களைக் கவனி காமம் என்றது

விருதுகள் கழுத்தில் வீழக் கண்டேன்
குருட்டு அதிர்ஷ்டம் கூடிய தென்றது
மீண்டும் மீண்டும் விருதுகள் கொண்டேன்
டெல்லியில் யாரையோ தெரியும் என்றது

திசைகள் தோறும் தேதி கொடுத்தேன்
அய்யோ புகழுக் கலைகிறான் என்றது
நேரக் குறைவு நிறுத்திக் கொண்டேன்
கணக்குப் பார்க்கிறான் கவிஞன் என்றது

.

அப்படி இருந்தால் அதுவும் தப்பு
இப்படி இருந்தால் இதுவும் தப்பு
கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்
தன்நிழல் பார்த்துத் தானே குரைக்கும்

உலகின் வாயைத் தைத்திடு; அல்லது
இரண்டு செவிகளை இறுக்கி மூடிடு
உலகின் வாயைத் தைப்பது கடினம்
உந்தன் செவிகள் மூடுதல் சுலபம்!

திங்கள், 22 ஏப்ரல், 2013

விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை - போராட்டத்தில் பங்கேற்று புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சிகொள்ள செய்தவர்.

    “இழந்து போனவனுக்கு வாழ்க்கை துயரம்
    எழுந்து நடப்பவனுக்கு எல்லாமே மதுரம்”
    “துயரம் அழுவதற்காக அல்ல... எழுவதற்காக
"

    - இத்தகைய மகத்தான சொற்களை கவிதையாக எழுதியவர் அவர்…

    ”அட மானுடனே!
    தாயகத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்
    பெற்ற தாய் சுமந்தது பத்து மாதம்
    நிலம் சுமப்பதோ நீண்ட காலம்.
    அன்னை மடியில் இருந்து கீழிறங்கி
    அடுத்த அடியை நீ வைத்தது
    தாயகத்தின் நெஞ்சில்தானே.
    இறுதியில் புதைந்தோ
    அல்லது எரிந்தோ எருவாவதும்
    தாய்நிலத்தின் மடியில்தானே.
    நிலமிழந்து போனால் பலமிழந்து போகும்
    பலமிழந்து போனால் இனம் அழிந்து போகும்
    ஆதலால் மானுடனே!
    தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக் கொள்


வாழ்க்கையின் மீதான அதி உன்னதமான நம்பிக்கைகளையும், அழகியலையும் தரும் இத்தகைய உக்கிரமான கவிதைகளை எழுதிய கவிஞர் புதுவை இரத்தினதுரை, தனது பதினான்காவது வயதில் கவிதை எழுத தொடங்கி, முப்பத்தேழாவது வயதில் (1935) விடுதலைப் பாதையில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டவர், ஒரு சிற்பக் கலைஞரும் கூட.

“எமது மக்களுடைய நுகத்தடிகளை உடைத்தெறிவதில் நானும் போராட வேண்டும் என்று நினைத்தேனே தவிர, தொடர்ந்தும் கவிதை எழுதிக் கொண்டிருப்பேன் என்ற நினைப்பில் நான் வரவில்லை. ஆனால், அமைப்புக்கு வருவதற்கு முன்பே எனது துறை கலையாக இருந்தபடியால், அமைப்புக்குள் நுழைந்த பின்பும் இயக்கத்தில் கலைப் பண்பாட்டுத் துறையை கவனிக்க வேண்டியதே எனக்கிடப்பட்ட பணி ஆகியது. இந்தப்பணியை நான் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்” என உறுதியுடன் கூறிவந்த புதுவை இரத்தினதுரை, ”ஈழத்தில் மட்டுமல்ல மானுடம் எங்கு வதைபடுகிறதோ, அங்கெல்லாம் அவர்களுடைய மொழியில் எனது கவிதை பேசும்” என்கிறார்.

கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதைகளை படித்தும், கவிதைப் பாடல்களை கேட்டும் பலநூறு இளைஞர்களும், இளைஞிகளும் விடுதலைப் படையினில் வந்து சேர்ந்து “மண் மீட்புக்காக” களமாடிக் கொண்டிருப்பதை சென்னையில் என் அண்டை வீட்டில் வாழும் ஈழத் தமிழ் நண்பர் யொனி, சொல்ல கேட்கும் பொழுது - கவிஞரின் “கவிதாயுதம்” இருப்பதிலேயே உயர் கருவியாக மதிக்கப்பட்டு - மெய் சிலிர்க்க வைக்கிறது.

ஈழமண்ணில் தோன்றிய மிகச்சிறந்த ஆய்வாளர்களும் ஒருவரான பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள், புதுவை இரத்தினதுரை கவிதைகள் பற்றி குறிப்பிடும்பொழுது,

    “...இந்த மண் எங்களின் சொந்த மண் இதன்
    எல்லைகள் மீறி யார் வந்தவன்.
    நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து
    நின்றது போதும் தமிழா - உந்தன்
    கலைகள் அழிந்து கவலை மிகுந்து
    கண்டது போதும் தமிழா இன்னும்
    உயிரை நினைத்து உடலை சுமந்து
    ஓடவா போகிறாய் தமிழா...


என நெருப்பாக தொடங்கி நீளும் ஒரு பாட புதுவை இரத்தினதுரை எழுதியுள்ளார். அந்த பாடல் வரிகள் எத்தகைய தாக்கத்தை மக்கள் மனத்தில் ஏற்படுத்தியது என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன் - ஈழத்திலுள்ள திருநல்வேலி சந்தியில் 1993இல் ஒரு நாள் அதிகாலை 4 மணியளவில் ஒருவர் தேநீர் குடித்துவிட்டு, சுருட்டு பற்ற வைத்துக்கொண்டு குளிருக்காக தலையையும் காதையும் மறைத்து தான் போட்டிருந்த போர்வையுடன் மிதிவண்டியில் ஏறிய நேரத்தில் இந்தப் பாடலும், “வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்” பாடலும் ஒலிபரப்பாக மிதிவண்டியில் அப்படியே நின்றபடி கேட்டுவிட்டு சென்றார். புதுவை இரத்தினதுரையின் புரட்சிக் கருத்துக்களையும் நெகிழ்ச்சியான அனுபவங்கலையும் பாடலில் கேட்டு, உறைந்துபோன அந்த ஈழத் தமிழனின் செயலை கண்டு மனம் நெகிழ்ந்தேன்” என்று பூரிப்போடு கா.சிவதம்பி எழுதியுள்ளார்.

விரும்பி இடம்பெயர்வது வேறு - விரும்பாமல் வன்முறை செய்து இடம்பெற வைப்பதென்பது வேறு. புலம் பெயர வைப்பவன் - இறுதியில் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் அவனை மன்னிக்கவே கூடாது என மனம் பதற வைக்கிறது புதுவை இரத்தினதுரையின் சில படைப்புகள்.

    “ஊர் பிரிந்தோம்
    ஏதும் எடுக்கவில்லை
    அகப்பட்ட கொஞ்சம் அரிசி,
    பருப்பு, இரண்டு பாய், இருமல் மருந்து,
    மனைவியின் மாற்றுடுப்பு மூன்று,
    காற்றுப் போய்க்கிடந்த மிதிவண்டி,
    காணியுறுதி,
    அடையாள அட்டை அவ்வளவே,
    புறப்பட்டு விட்டோம்.
    இப்போ உணருகிறேன்
    உலகில் தாளாத துயரெது?
    ஊரிழந்து போதல் தான்.


இந்த நிலை - அரை நூற்றாண்டாக... ஈழமண்ணில் தொடர்கிறது. இது நாளையும் தொடரும் என்கிற போது... சொல்லி புலம்ப சொற்களில்லை. இயலாமையால் மனம் மௌனமாகிறது.

    “தம்பி பெஞ்சாதியின் தமையன் வீட்டில்
    இரவில் பாய்விரிக்க எங்கு இடமிருந்தாலும்
    அங்கு உடல் சரிப்பு.
    வீட்டுக்காரரின் தூக்கம் கலையுமென
    இருமலைக் கூட உள்ளே புதைப்பு
    களவுக்கு வந்தவன் போல மனைவியுடன் கதைப்பு
    கிணற்று வாளி தட்டுப்பட்டாலே படபடப்பு
    ஒண்டுக்கிருத்தல்,
    குண்டி கழுவுதல்
    ஒவ்வொன்றையும் பயந்தபடி ஒப்பேற்றல்
.”

இப்படி காலம் காலமாக சிதைந்தும் - மனம் சிதையாமல் இருப்பதெப்படி?. நம்பிக்கை. உண்மையின் மேல் ஈழத் தமிழர்கள் வைத்திருக்கும் பெரு நம்பிக்கை. இந்த நூற்றாண்டிற்கு மட்டுமல்ல - இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழனின் விடுதலைப் போராட்டத்திற்கான இந்த “எரிசக்தி” கையிருப்பாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

    “இன்று நடை தளர்ந்தும்
    நரை விழுந்தும் தள்ளாடும்
    ஐம்பது ஆண்டுகளுக்கு முந்திய இளைஞர்களே!
    வெள்ளைத் தோல் சீமான்கள்
    வீடு திரும்ப மூட்டை கட்டியபோது
    நீங்கள் ஏன் ஊமையானீர்கள்?


என்று ஒரு ஞாயமான வினாவை தனது கவிதை மூலம் புதுவை இரத்தினதுரை எழுப்புகிறார். செய்யவேண்டிய வேலையை, செய்ய வேண்டிய நேரத்தில் செய்து விட்டால் தலைமுறைகள் ஏன் தத்தளித்தாடுகிறது என்று கேட்ட கவிஞர், இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கும் சுருக்கென சூடு வைக்க தயங்கவில்லை,

    “உடல்கீறி விதை போட்டால்
    உரமின்றி மரமாகும்
    கடல் மீது
    வலை போட்டால்
    கரையெங்கும் மீனாகும்.
    இவளின் சேலையைப் பற்றி
    இந்தா ஒருவன்
    தெருவில் இழுக்கின்றான்
    பார்த்துவிட்டுப்
    படுத்துறங்குபவனே!
    நீட்டிப்படு.
    உனக்கும் நெருப்பூட்டிக் கொளுத்த
    அவனுக்கு வசதியாக இருக்கட்டும்.
    ‘ரோஷ’ நரம்பை
    யாருக்கு விற்று விட்டுப்
    பேசாமற் கிடக்கின்றாய்?


இத்தகைய அற்புத படைப்பின் மூலம் - ஈழத் தமிழ்மக்களை போராட்ட களத்திற்கு செல்ல வழியமைத்தவர் புதுவை இரத்தினதுரை.

    “......சும்மா காற்றில் பற்றியா இந்தத் தீ மூண்டது?
    இந்த அனல் பிடித்தெரிய எத்தனை காலம் பிடித்தது.
    எத்தனை பேரைத் தீய்த்து
    இந்த தீ வளர்த்தோம்.
    எத்தனை பேரை நெய்யாக வார்த்தோம்
    அணைய விடக்கூடாது
    ஊதிக்கொண்டேயிரு.
    பற்றியெரியப் போகுதெனப் பதறுவர்
    ஊதுவதை நிறுத்தி விடாதே
    இந்தத் தீயின் சுவாலையிற்தான்
    மண் தின்னிகள் மரணிக்கும்
.”

இப்படி நிறைய பதிவு செய்ய விரும்புகிறேன். அடுத்தடுத்த நாள்களில் பதிவிடுகிறேன்...

எமக்கு பிடித்த பகுத்தறிவாதிகளில் ஒருவர் இங்கர்சால்

அமெரிக்காவில் பிறந்த இந்த மனிதன் தனது சிந்தனையை பகுத்தறிவை நோக்கியும் சமய அடக்குமுறைக்கு எதிராகவும் செயல்படுத்தியவர். அவரைப் பற்றி சில வரிகள்...:::

இங்கர்சால்
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

பைபிளின் ஆசிரியனுக்குச் சூரியனைப்பற்றி ஏதாவது தெரியும் என்று யாராவது
கற்பனை செய்கின்றீர்களா?

துருவ நட்சத்திரம்பற்றிப் பைபிளை எழுதியவனுக்கு ஏதாவது தெரியும் என்று
எண்ணுகிறீர்களா?

நமக்கு மிகத் தொலைவில் இருக்கும் 20 லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு
அவற்றின் ஒளி நமது கண் களை வந்தடையும் விண்மீன் கூட்டங்களைப்பற்றிப்
பைபிள் கர்த்தாவுக்கு ஏதாவது தெரியும் என்று கருதுகிறீர்களா? என்று
கேள்வி கேட்டவர்.

ஞானஸ்தானத்தைவிட சோப்பு ஸ்நானம் நல்லது.

மத குருமார்கள் மனிதனை ஆண்டவன் மன்னிப்பாரா? என்று கேட்டனர்.

ஆனால், பல நூற் றாண்டுகளாக மனித இனம் அனுபவித்து வரும் கொடு மைகளையும்,
இன்னல்களை யும் வடித்துவரும் துன்பக் கண்ணீரையும் நான் எண் ணும்போது
ஆண்டவனை மனிதன் மன்னிப்பானா? என்று அறிவார்ந்த வினாக் கணையைத்
தொடுத்தவர்.

பிறர் உழைப்பிலேயே வாழ்வது – உங்கள் சகோதர மனிதனை அடிமைப்படுத்தி,
சங்கிலியால் அவன் உடலைக் கட்டிப் போடுவது, பலகீனமானவர்களையும்,
ஆதரவற்றவர்களையும் அடித்து, அதன்மூலம் அறி யாமையிலும், மூடத்தனத் திலும்
மூழ்கியிருக்கும் மக்களின் பாராட்டுதலைப் பெறுவது, மனிதர்களின் மனதை
அடிமைப்படுத்தி மூளைக்கு விலங்கிட்டு, உதடுகளுக்குப் பூட்டுப் போடுவது,
முட்டாள்களாக இருக்கும் பலரின் உத்தர வின் பேரில் அறிஞர் சில ரைத்
தண்டிப்பது, நரக லோகத்தின் வர்ணனை யைக் கூறி, குழந்தைகளின் பிஞ்சு
மனத்தைப் பாழாக்கு வது, உங்கள் மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்துகொள் வது
இவைகளே உண்மை யான தேவ நிந்தனையாகும். அரசியல் சட்டத்தில் பேச்சுச்
சுதந்திரம் தந்திருப்பதாகக் கூறிவிட்டு, தேவ நிந்தனையாகப் பேசினான் என்று
ஒருவன்மீது வழக்குத் தொடர்வது முன்னுக்குப் பின் முரண் இல்லையா? என்று
அழுத்தமாகக் கேள்வி கேட்டவர்!

நாத்திகம் என்பது வெறும் கடவுள் மறுப்பு வாதம் அன்று; அநீதிக்கு, ஏற்றத்
தாழ்வுக்கு, அடிமை முறைக்கு எதிரான ஒரு போராட்ட மாகும்; முற்றிலும்
மனிதத் தன்மை கொண்டதாகும்.

தன்னை அழிவுப் பணியாளன் என்று பிறர் கூறும் போது, ஒருவன் விதையை
விதைத்தாலும், விதைக்கா விட்டாலும், களைகளையும், முட்செடிகளையும்
அழித்தால் அவன் நன்மை செய்பவனே! என்று ஆணித்தரமாக விவாதிட்டவர் -
அவர்தான் கர்னல் ராபர்ட் இங்கர்சால்.

பாதிரியார் குடும்பத்தில் பிறந்து, தம் தந்தை பாதிரியாரையே திருத்திய
கோமகன். அவர் நினைத்திருந்தால் அமெரிக்காவின் ஜனாதிபதியாகி இருக்க
முடியும் – ஆனால் கொள்கையில் சமரசம் காணாதவர் ஆயிற்றே!

என்ன, தந்தை பெரியாரின் நினைவு வருகிறதா?

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

ஹியுகோ சாவேஸ் 1954-2013: அமெரிக்காவை மண்டியிட வைத்த வெனிசுலாவின் வீரப்புதல்வன்!

வெனிசுலாவின் அதிபர் ஹியுகோ சாவேஸ் மார்ச் 5-ஆம் தேதியன்று மறைந்தார். அவருக்கு வயது 58. “யோ ஸா சாவேஸ்” (நானே சாவேஸ்) என்று கண்களில் நீர் வழிய முழங்கியபடியே இருபது இலட்சம் மக்கள் தங்களுடைய தேசத்தின் வீரப்புதல்வனது உடலை ஏந்திச் சென்றனர். “வாழ்வதும் மரிப்பதும் வேறுவேறல்ல. வாழ்தலின் மரித்தல் சிறந்ததாகவும் இருக்கலாம் – வாழும் காலத்தில் செயவேண்டியதை ஒருவன் செய்திருந்தால்” என்று கூறினான் கியூபாவின் மறைந்த விடுதலைப் போராளியும் கவிஞனுமான ஜோஸ் மார்ட்டி. செய்ய வேண்டியதைச் செய்தவர்தான் சாவேஸ் என்ற போதிலும், அரியதொரு தலைவனைத் திடீரென்று இழந்த அதிர்ச்சியில் தவிக்கின்றனர் வெனிசுலா மக்கள்.


“அவர் மீது புற்றுநோய் ஏவப்பட்டிருக்கிறது என்றும், அந்தச் சதியை விரைவில் கண்டுபிடிப்போம்” என்றும் கூறியிருக்கிறார் கூறுகிறார், சாவேஸிற்குப் பின் பொறுப்பேற்றிருக்கும் நிக்கோலஸ் மாதுரோ. “விரைவிலேயே இந்த மர்மம் வெளியே வரும்” என்கிறார் பொலிவிய அதிபர் இவா மொரேல்ஸ். தென் அமெரிக்க கண்டத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்கும் தலைவர்கள் 6பேர் அடுத்தடுத்து புற்றுநோய்க்கு ஆட்பட்டிருக்கின்றனர். உணவு, பரிசுப் பொருட்கள், உள்ளாடைகள் போன்றவற்றை இரகசியமாக கதிரியக்கத்துக்கு ஆளாக்குவதன் மூலம், தமது அரசியல் எதிரிகளைக் கொலை செய்வதாக சி.ஐ.ஏ – வைப் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். பிடல் காஸ்டிரோவைக் கொல்வதற்குப் பல வழிகளில் முயன்று தோற்ற இழிபுகழ் பெற்றதுதான் சி.ஐ.ஏ. என்பதால் இந்தக் குற்றச்சாட்டு அலட்சியப்படுத்தக் கூடியது அல்ல.

சாவேஸின் மீது கொலைவெறி கொள்வதற்கான எல்லா முகாந்திரங்களும் அமெரிக்காவுக்கு இருந்தன. அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பின் வலிமையான குறியீடாக சாவேஸ் இருந்தார். 2001-இல் இராக்கிற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்து, சதாமுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று உலக நாடுகள் அனைத்தையும் அமெரிக்கா மிரட்டி வைத்திருந்தபோது, சாவேஸ் இராக் சென்றார். புஷ் கண்டனம் தெரிவித்தபோது, “வெனிசுலா இறையாண்மை கொண்ட ஒரு நாடு என்பதை புஷ்ஷுக்கு நினைவுபடுத்துகிறேன்” என்று அலட்சியமாக பதிலளித்தார். ஆப்கான், இராக் ஆக்கிரமிப்புகளை வெளிப்படையாக எதிர்த்துக் குரல் கொடுத்தார். 2008-இல் காசாவின் மீது இசுரேல் படையெடுத்த மறுகணமே, தூதரக உறவைத் துண்டித்துக் கொண்டார்.

தமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அதிபர் ஹியுகோ சாவேஸின் மரணச் செய்தியைக் கேள்வியுற்றுக் கதறியழும் வெனிசுலா மக்கள்.

2006-ஆம் ஆண்டு ஐ.நா.-வில் உரையாற்றிய சாவேஸ், “நேற்று சாத்தான் இங்கே வந்திருந்தது. இதே இடத்தில், இதோ நான் நிற்கிறேனே இதே இடத்தில் நின்றிருந்தது. கந்தக நெடிகூட இன்னும் போகவில்லை” என்று ஐ.நா.-வில் முந்தைய நாள் உரையாற்றிச் சென்றிருந்த போர்வெறியன் ஜார்ஜ் புஷ்ஷை எள்ளி நகையாடினார். அது அவை நாகரிகத்தில் பொருந்திய ராஜதந்திர மொழியன்று. ஆனால், அமெரிக்காவின் நடத்தைக்குப் பொருந்திய மொழி. ஆகவேதான் சங்கடத்தில் நெளிந்தாலும் அவையோரால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

1954-இல் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்து பிழைப்புக்காக இராணுவத்தில் சேர்ந்தவர் சாவேஸ். இராணுவத்தில் சேர்ந்தவுடன், செங்கொடி இயக்கம் என்றழைக்கப்பட்ட மாவோயிஸ்டு கொரில்லாக்களை ஒடுக்குவதற்கான படைப்பிரிவுக்குத்தான் அனுப்பப்பட்டார். ஏழைகளுக்காகப் போரிட்ட மாவோயிஸ்டுகள் மீது அரசு ஏவிய சித்திரவதைகளும் படுகொலைகளும் அவரைச் சிந்திக்கத் தூண்டின. 1989-இல் சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைக்கேற்ப வெனிசுலாவில் அதிரடியாக அமல்படுத்தப்பட்ட மானியவெட்டுகள் மற்றும் தனியார்மய நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டம் ஒடுக்கப்பட்டு, நாடு முழுவதும் 3000 பேர் கொல்லப்பட்டனர்.


1973-இல் சிலியில் நிகழ்ந்த ஆட்சிக்கவிழ்ப்பு, அலண்டே கொலை, இலத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்திலும் அமெரிக்காவால் திணிக்கப்பட்ட இராணுவ சர்வாதிகார ஆட்சிகள் என்ற பின்புலத்தில் தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும், அமெரிக்க எதிர்ப்பும் சோசலிச நாட்டமும் கொண்ட பலவிதமான ஆயுதக் குழுக்கள் தோன்றியிருந்தன. அத்தகைய குழுவொன்றை இராணுவத்திற்குள் சாவேஸும் உருவாக்கியிருந்தார். 1992-இல் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை நடத்த முயன்று தோற்றார். “தோழர்களே, துரதிருஷ்டவசமாக எங்கள் இலட்சியத்தில் வெற்றி பெற இயலவில்லை – இப்போதைக்கு” என்று தொலைக்காட்சியில் பேசினார் சாவேஸ். “இப்போதைக்கு” என்ற அந்த ஒரு சொல் மக்கள் நினைவில் பதிந்திருந்தது. சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்த பின்னர், 1998-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சாவேஸ் வெற்றி பெற்றார்.

வெனிசுலாவின் எண்ணெய் வளம் முழுவதையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்காவின் எக்சான் மொபில் உள்ளிட்ட நிறுவனங்கள் தம் இலாபத்தில் ஒரு விழுக்காட்டை மட்டுமே ராயல்டியாக கொடுத்து வந்ததை 13 சதவீதமாக உயர்த்திச் சட்டமியற்றியவுடன், சாவேஸுக்கு எதிரான இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை அமெரிக்கா அரங்கேற்றியது. ஆனால், உலகம் முழுவதும் பல நூறு ஆட்சிக்கவிழ்ப்புகளை நடத்திய அனுபவம் கொண்ட அமெரிக்கா, வெனிசுலாவில் மண்ணைக் கவ்வியது. பல்லாயிரக்கணக்கான மக்கள், குறிப்பாகப் பெண்கள் இராணுவத்தை முற்றுகையிட்டுப் பணிய வைத்தனர். 28 மணி நேரத்தில் ஆட்சிக்கவிழ்ப்பு தோற்றது. சாவேஸ் மீண்டும் பதவியில் அமர்ந்தார். தமக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களில் வேலை நிறுத்தத்தை அமெரிக்க முதலாளிகளே தூண்டிவிட்டனர். பொருளாதாரம் நிலைகுலைந்தது. உள்நாட்டிலேயே மக்களுக்கு எரிபொருள் இல்லை. “முதலாளிகளிடம் பணியாதே சாவேஸ். நாங்கள் தாக்குப்பிடிக்கிறோம்” என்று கூறி அத்தனை துன்பங்களையும் சகித்துக் கொண்டார்கள் மக்கள்.


நாட்டின் எண்ணெய் வளம் தந்த வருவாயை மக்கள் நலத்துக்குப் பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியதுதான் சாவேஸின் வெற்றிக்கு காரணம். 2005-இலேயே நூறு விழுக்காடு கல்வியறிவு சாதிக்கப்பட்டுவிட்டது. மக்களுக்கு உணவு உத்திரவாதம் செயப்பட்டிருக்கிறது. சுமார் 3 இலட்சம் பேருக்கு நிலம் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான கூட்டுறவுக் கழகங்கள் எல்லாத் துறைகளிலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கியூபாவிலிருந்து சுமார் 25,000 மருத்துவர்கள் பணியிலமர்த்தப்பட்டு மக்களுக்கு தரமான மருத்துவம் இலவசமாக வழங்கப்படுகிறது. முதல் வகுப்பு முதல் பல்கலைக் கழகம் வரையில் கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது. வீடற்றவர்களுக்கு 5 இலட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. வெனிசுலாவில் வீடற்றவர்களே இல்லை என்று கூறும் விதத்தில், அடுத்த 6 ஆண்டுகளில் மேலும் 20 இலட்சம் வீடுகள் கட்டப்படுகின்றன. மற்ற உற்பத்தி சார்ந்த உழைப்புகளைப் போலவே பெண்களின் குடும்ப உழைப்புக்கும் ஊதியம் வழங்கப்படவேண்டும் என்று கூறி, குடும்ப உழைப்பில் ஈடுபடும் பெண்களுக்கு அரசு ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது.

ஏழை, எளிய உழைக்கும் மக்கள் மீது இயல்பிலேயே அவரிடம் ததும்பிய நேசத்தையும், உண்மையான அக்கறையையும் அவரது எதிரிகள்கூட மறுக்க முடிந்ததில்லை. சாவேஸ் மக்களுடன் நேருக்குநேர் உரையாடி, அவர்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் “ஹலோ பிரசிடென்ட்” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி இதற்கு சான்றாக அமைந்தது.

கல்வி, மருத்துவம் போன்றவற்றை மக்களின் அடிப்படை உரிமைகளாக சாவேஸ் மாற்றியதை எதிர்க்கவும் முடியாமல், இத்துறைகளிலிருந்து தனியார் முதலாளிகள் விரட்டப்பட்டதை ஏற்கவும் முடியாமல் தவித்தனர் அமெரிக்க சார்பு முதலாளிகள், “மாதம் 25,000 ரூபாய் (450 டாலர்) தருகிறோம். நீங்கள் விரும்பிய வண்ணம் தரமான சேவையை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்” என்று ‘உங்கள் பணம் உங்களை கையில்‘ திட்டத்தைப் போலவே தனியார்மயத்தின் தந்திரத்தை கடைவிரித்துப் பார்த்தனர். மக்கள் மசியவில்லை.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு ஏழை நாடுகளில் மருத்துவமும், பொது சுகாதாரமும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வரும் வேளையில் சாவேஸ் அச்சேவைகளைத் தேசியமயமாக்கினார்.

சாவேஸின் திட்டங்கள் வெனிசுலாவின் கஜானாவைக் காலியாக்கிவிடும் என்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் முதலாளித்துவ ஊடகங்கள் கடந்த பத்தாண்டுகளாகக் கூக்குரலிட்டுப் பார்த்தன. வெனிசுலாவின் பொருளாதாரம் கடந்த பத்து ஆண்டுகளில் சராசரியாக 5.8 % வளர்ச்சியைக் கண்டது. மானியவெட்டு, மக்கள் மீது வரிவிதிப்பை அதிகப்படுத்துவது, தனியார்மயம் போன்ற வழிமுறைகள் மூலம்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்ற சர்வதேச நிதி நிறுவனங்களின் தீர்வை சாவேஸ் பொய்ப்பித்தார். இதன் காரணமாக வெனிசுலாவின் முன்னுதாரணத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற குரல்கள் நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஐரோப்பிய நாடுகளில் எழத்தொடங்கின.

எண்ணெய், மின்சாரம், தொலைபேசி, சிமென்டு உற்பத்தி உள்ளிட்ட கேந்திரத் தொழில்துறைகளை பொதுச்சொத்தாக்குவது, மற்ற தென் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுடனான வணிகத்துக்கு முதன்மை முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் வணிகத்துக்கு அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களைச் சார்ந்திருப்பதிலிருந்து விடுவிப்பது, தென் அமெரிக்காவைத் தனது சுதந்திர வர்த்தக வலையத்துக்குள் கொண்டு வர முயன்ற அமெரிக்காவின் சதியை முறியடித்து, தென் அமெரிக்கக் கண்டத்தின் நாடுகளுக்கான தனி வர்த்தக வலையத்தை உருவாக்கியது, உலக வங்கிக்குப் போட்டியாக தென் அமெரிக்க நாடுகளுக்கான ஒரு பொது வங்கியை உருவாக்கியது, தேசிய எல்லைகளைக் கடந்து தென் அமெரிக்கக் கண்டம் என்ற முறையில் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு எதிராக நாடுகளை ஒன்றுபடுத்தியது, வணிகம்-இலாபம் என்ற முதலாளித்துவ அளவுகோல்களை நிராகரித்து வெனிசுலாவின் எண்ணெய், எரிவாயுவை கியூபாவுக்கும் பிற தென் அமெரிக்க நாடுகளுக்கும் மலிவு விலையில் வழங்கியது  போன்றவையெல்லாம் மிகவும் குறுகிய காலத்தில் சாவேஸ் நிகழ்த்திய சாதனைகள்.

அமெரிக்க ஆதரவுடன் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து வெனிசுலா மக்கள் கார்கஸ் நகரில் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம் (இடது); வெனிசுலா இராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்த சாவேஸ், மக்களின் போராட்டத்தையடுத்து விடுதலை செய்யப்படுகிறார் (கோப்புப் படம்).

இவையனைத்தும் வெனிசுலாவின் முதலாளித்துவ அரசமைப்புக்கு உட்பட்டு, முதலாளித்துவக் கட்சிகளையும், பெரும் தனியார் முதலாளிகளையும், அவர்களால் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட அரசு எந்திரத்தையும், 95% அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்களையும் வைத்துக்கொண்டே செயப்பட்ட சீர்திருத்தங்கள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் இவர்கள் தடைக்கற்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

மென்மேலும் மக்களிடம் செல்வதன் மூலமும், தங்களுடைய கோரிக்கைக்கான போராட்டத்தில் அவர்களையும் ஈடுபடுத்துவதன் மூலமும் சாவேஸ் அவற்றை எதிர்கொண்டிருக்கிறார். முதலாளித்துவத்தைக் கட்டுப்படுத்துகின்ற, அதிகாரவர்க்கத்தின் அதிகாரங்களைக் குறைத்து மக்களின் அதிகாரத்தை அதிகப்படுத்துகின்ற சட்டங்கள், திட்டங்களைக் கொண்டுவரும்போது, அவை குறித்துத் தேசம் தழுவிய வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுப்பது என்ற முறையின் மூலம், எதிரிகளை அரசியல்ரீதியில் பலமிழக்கச் செய்திருக்கிறார்.

தேர்ந்தெடுத்தவர்களைத் திருப்பி அழைக்கும் உரிமை என்பதை வெனிசுலாவின் அரசியல் சட்டத்தில் சாவேஸ்தான் அறிமுகப்படுத்தினார். சாவேஸ் ஒரு சர்வாதிகாரி என்ற அவதூறு பிரச்சாரத்தில் தொடங்கி ஆட்சிக்கவிழ்ப்பு வரையில் அனைத்தையும் முயன்று பார்த்த அமெரிக்க அடிவருடிகள், திருப்பி அழைக்கும் உரிமையையும் பயன்படுத்திப் பார்த்தனர். அதிலும் தோற்றனர்.

சாவேஸ் தன்னை ஒரு சோசலிஸ்டு என்றும் கிறித்தவர் என்றுமே சொல்லிக் கொண்டார். அவருடைய கட்சி பல்வேறு விதமான குட்டி முதலாளித்துவ, தேசியவாத, சோசலிச சக்திகளின் கூட்டணியாகவே இருந்தது. 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வெனிசுலாவின் விடுதலைப் போராளியான சைமன் டி பொலிவாரையே தனது வழிகாட்டியாக அவர் அறிவித்துக் கொண்டிருந்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பு, தென் அமெரிக்க ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவை இணைந்த, கம்யூனிசத்தின்பால் பெருமதிப்பு கொண்ட ஒரு கண்ணோட்டம் சாவேஸை வழிநடத்தியது. தான் படைக்க விரும்புவது 21-ஆம் நூற்றாண்டின் சோசலிசம் என்று அவர் கூறிக்கொண்டபோதும், அதனை அவர் விளக்கவுமில்லை. ரசிய – சீன சோசலிசங்களுக்கு எதிராக நிறுத்தவுமில்லை.

“சாவேஸ் ஒரு புரட்சிகரமான தேசியவாதி. அவருடைய ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியத்தின் புரட்சிகரமான தன்மை அவரை சோசலிசத்தை நோக்கித் தள்ளிக்கொண்டே இருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, தேசிய எல்லை கடந்து தென் அமெரிக்க கண்டத்தை ஒற்றுமைப்படுத்த முயன்ற பொலிவார், ஜோஸ் மார்டி ஆகியோர் விதைத்த மரபு சாவேஸின் பின்புலமாக அமைந்தது” என்று மதிப்பிடுகிறார் அஜாஸ் அகமது.

தனது கொல்லைப்புற சோதனைச்சாலையாக தென் அமெரிக்க நாடுகளைப் பயன்படுத்தி வரும் அமெரிக்கா, 1970-களில் தனது கைப்பாவை ஆட்சிகளைப் பல நாடுகளில் நிறுவியதுடன், 1980-களிலேயே தனியார்மய தாராளமயக் கொள்கைகளை அந்த நாடுகளில் சோதிக்கத் தொடங்கியது. இதன் விளைவாக, 1980-களின் இறுதியில், ஆசிய நாடுகளில் புதிய தாராளவாதக் கொள்கை தீவிரமாக கடைவிரிக்கப்பட்ட காலத்தில், அங்கே “ஏகாதிபத்தியங்களின் கடையை மூடுவதற்கான” மக்கள் கலகங்கள் வெடிக்கத் தொடங்கி விட்டன.

இந்தப் பின்புலம் வலிமையானதொரு கம்யூனிஸ்டு கட்சியை அதிகாரத்துக்குக் கொண்டுவரும் அளவுக்கு மக்களைப் புரட்சிகரமான மாற்றத்துக்கு உள்ளாக்கவில்லை என்ற போதிலும், சாவேஸ் என்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆளுமையைத் தோற்றுவித்திருக்கிறது. “நானே சாவேஸ்” என்ற கதறியபடியே அவரது உடலைப் பின்தொடர்ந்து செல்லும் வெனிசுலாவின் உழைக்கும் மக்கள், சாவேஸ் தங்களைக் காலத்தால் முந்திக் கொண்டுவிட்டதைத் தம் கண்ணீரால் உணர்த்துகிறார்கள்.

அமெரிக்காவில் இருக்கும் வெனிசுலா அரசின் வழக்குரைஞர், சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்கிறார். வெனிசுலாவில் பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றிருந்த சாவேஸ், நிகழ்ச்சி முடிந்த பின் மேடையேறி, ஒரு சிறுமியிடம்

“நீ அணிந்திருப்பது என்ன உடை கண்ணு?” என்று கேட்க, நான் ஒரு மாஜிக் நிபுணர்” என்று பதிலளித்தாள் அந்தச் சிறுமி.
“அய்யோ, அப்படியானால் என்னை காணாமல் போக வைத்து விடுவாயா?” என்றாராம் சாவேஸ்.
“இல்லை. உங்களைப் போலவே பல பேரை உருவாக்கிக் காட்டுவேன்” என்றாளாம் அந்தச் சிறுமி.

அந்தச் சிறுமி சொன்னதைத்தான் வெனிசுலா மக்கள் எதிரொலிக்கிறார்களோ!

வியாழன், 11 ஏப்ரல், 2013

விழியடா! தமிழா, விழியடா!


விழியடா! தமிழா, விழியடா!
புலியடா! நீயோ புலியடா!
அறநெறி அனைத்தையும் கற்றுணர்ந்து
மறநெறி முறைகளைப் பட்டுணர்ந்து
எரிமலை ஆகிட சரிநிலை இதுவென
புயலாய்ப் புயலாய் வெறி பிடித்து
                                                                                                            [விழியடா!]
தமிழைப் பழித்தவன் தலையில் கல்கொண்டு
கண்ணகிக்கு சிலை எழுப்பினான்!
தமிழை அழித்தவன் வலையில் விழுந்து
சாமி, சமயம் என்று மழுப்பினான்!
மானத்தமிழர் நாம் ஓய மாட்டோம்!
ஈனர் எவர் பின்னும் சாய மாட்டோம்!!
                                                                                                               [விழியடா]
தங்குதடையின்றி தமிழை நாம் பேசி
தரணி நடுங்க நடை பயிலுவோம்!
பொங்கு தமிழ் இனி மங்கிப் போகாமல்
சங்கம் வைத்தியங்க முயலுவோம்!
வீரத் தமிழர் நாம் அடங்க மாட்டோம்!
முட்டி எழுவோம்! இனி முடங்க மாட்டோம்!!
                                                                                                                [விழியடா]
நம் மொழி! தமிழ்மொழி! உயிருக்கு நேர்மொழி!
எதிர்ப்பவன் சிரத்தினை அழுத்துவோம்!
நம்மொழிக்கு நிகர் எம்மொழியும் இல்லை
புகுந்ததை எல்லாம் கொளுத்துவோம்!
முதலில் மொழியை மீட்டெடுப்போம்!
அதற்கோர் தேசிய பாட்டெடுப்போம்!!
                                                                                                                [விழியடா]