திங்கள், 18 நவம்பர், 2013

விலங்கொடிக்கப் போ...!!!

கனவுகளா..?

கண்களைக் கசக்கி கலைத்துவிடு...!

எதிர்பார்ப்புகளா...?

எதற்கு அவை..? எரித்துவிடு...!

விருப்பங்களா...?

வந்த விலைக்கு விற்று விடு...!

உணர்வுகளா...?

உணவுக்குதவுமா...? உதறி விடு...!

உன்னிடம் இன்னும்

என்ன இருக்கிறது...?

தன்மானமா...?

இன்னுமா...?

அடே...! அதைக் கொண்டு

அரிசி வாங்க முடியுமா...?

அப்புறமென்ன...?

குப்புறக் கவிழ்த்து

கொளுத்தி விடு...!

சரி...! வா...!

உயிரும் உடலும் மட்டும்

இருக்கிறதா...?


போதும்...!

அடிமைக்கு இதுவே அதிகம்தான்...!

வா...! முதலில் குனி...!

நிமிர்ந்து பார்க்காதே...!

கைகளைக் கட்டு...!

பயமோ இல்லையோ

நடுங்கட்டும் கால்கள்...!

தோழா...!

உயரங்களை

உயர்த்திய உன் தோள்கள்,

மலைகளை

உடைத்தெறிந்த உன் கைகள்,

தேசங்களைக்

கடந்த உன் கால்கள்

அடிபட்டு மிதிபட்டு

அடிமைப்பட்டு வாழத்தானோ...?

வலி தாங்கும் உன் உடலுக்கு

வலிமை இல்லையோ...?

புண்பட்டு புண்பட்டு

புழுங்கும் உன் மனம்

பண்படவில்லையோ...?

போ...!

குனிந்த உன் முதுகெலும்பை

முறுக்கிவிட்டு போ...!

கட்டிக்கொண்டிருக்கும் உன் கைகளை

உயர்த்திக்கொண்டு போ...!

நடுங்கிய கால்களால்

வீறுநடை போட்டு போ...!

அடிமைக்கு உயிர் என்ன சொத்தா...?

எல்லோரும் விடப்போகும் உயிர்தான்...!

நீ போ...!

விலங்கொடித்து

விலங்கொடிக்கப் போ...!

காலம் எடுக்கும் உயிரை

நீ கைகளில் எடுத்து போ...!

உயிரைவிட வலுவாயுதம்

உலகினில் இல்லை...!

போ...! விரைந்து போ...!

மீண்டு வந்தால் வாழ்க்கை உண்டு...!

மாண்டு போனால் வரலாறு உண்டு...!


---

உதயகுமார் தமிழன்